நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை - 48 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டாம்
சமூகத்தில் ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், காய்ச்சல் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நோயின் பாதிப்பு குறித்து மக்களே எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க வேண்டாம் என பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன், மற்றும் டெங்கு பாதிப்புகள் இரண்டும் வேகமாக அதிகரித்து வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம். இதற்கு மேலதிகமாக தற்போது வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சூழலில் மருத்துவ கவனிப்பைப் பெறலாமா வேண்டாமா என மக்கள் தங்கள் சொந்த முடிவுக்கு வரக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும் என அவர் கூறியுள்ளார்.
போலியான தகவல் மற்றும் தவறான கருத்துக்களை நம்பாமல் கூடிய விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.