யாழ் கிரிக்கெட் மைதானத்தை கைவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை
யாழ்ப்பாணத்தில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்தை கைவிடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (24) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சுற்றுச்சூழல் அமைப்புகளின் முறைப்பாடு
சுற்றுச்சூழல் அமைப்புகளின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் (CEA) முறையான அனுமதிப்பத்திரங்களைப் பெறும் வரை பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தை மிக விரைவில் கட்டி முடிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வமான அறிக்கைகளும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகளுடனும் ஒருங்கிணைந்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.