எதுவுமே மாறப்போவதில்லை! காலம் காலமாக ஏமாறுவது நம்பி வாக்களித்த மக்கள்தான்
இலங்கை பிரித்தானியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பது ஜனாதிபதிகள் ஆட்சியில் அமர்ந்துவிட்டார்கள்.
திரு ஜே. ஆர் ஜெயவர்த்தனா வெளிப்படையாக ஆரம்பித்து வைத்த தமிழின படுகொலை, அவசரகாலச்சட்டம், பயங்கரவாதச்சட்டம் எந்தளவு கோரத்தாண்டவம் ஆடியது என்பது இலங்கையில் 1990ம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த யாவரும் அறிவோம்.
ஒவ்வொரு ஜனாதிபதிகள் மாறும் போதும் தமிழ் மக்கள் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றே எதிர்பார்த்து ஏமாந்தோம். மகிந்த ராஜபக்சவுக்கு பிறகு வந்தவர்கள் சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதி ஆட்சியை இல்லாதொழிப்போம் என்று வாய்க்கு வாய் உச்சரித்தும் எதுவும் நடை பெறவில்லை.
மைத்திரிபால சிறிசேன தமிழ் கூட்டமைப்பு நல்லாட்சி என்ற பெயரில் சகல வரப்பிரசாதங்களை அனுபவித்து கொண்டு எதிர்க்கட்சி தலைவராக திரு சம்மந்தன் அவர்கள் இராஜபோகவாழ்வை அனுபவித்த காலத்திலேனும் தமிழ் மக்களுக்கு தீபாவளிக்கு தீர்வு, தைப்பொங்கலுக்கு தீர்வு என்று சொல்லி காலத்தை கடத்தினாரே ஒழிய நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது ஒழிக்க ஒரு வார்த்தை கூட பாராளுமன்றத்தில் உச்சரிக்கவில்லை.
மகிந்த அன் கொம்பனி ஆட்சியை கைப்பற்றுவதற்காக நன்கு திட்டமிட்டு நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கை மக்கள் உட்பட அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பேர்ணாண்டோ பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட அனைவரும் அறிவார்கள்.
பல நூறு மக்களை ஜேசுபிரான் முன் கொன்று குவித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கொண்ட மகிந்த அன் கொம்பனி இரண்டு வருடத்திலேயே அதே பெரும்பான்மை இன மக்களால் துரத்தப்பட்டது.
தற்போது அவர்களது பொது ஜன பெரமுன சிதைந்து போய் உள்ளது. தேசிய பட்டியல் என்று ஒன்று இல்லை என்றால் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றம் வந்திருக்கவே முடியாது.
அது இருக்கட்டும் கோட்டாவை கலைத்து முடிய பல நாள் கனவோடு இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆட்சி பீடத்தில் ஏறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி தேடித்தருவதாக சொன்னார் கடைசி வரை நடக்கவே இல்லை.
நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவேன் என்றார் நடக்கவில்லை. காரணம் இவரை ஆசனத்தில் ஏற்றி அழகு பார்த்தது மகிந்த அன் கம்பனி! எப்படி நடக்கும் அதை விட மத்திய வங்கி பிணை முறி ரணில் பிரதமராக இருந்த நல்லாட்சி காலத்தில்தானே நடந்தது. கள்ளனே கள்ளனை பிடிப்பானா நடக்காத விஷயம்.
அது இருக்க வெளியே இருந்து கொக்கரித்து கொண்டே இருந்த ஜனதா விமுக்தி பெரமுன அதாவது இப்போதைய ஜனாதிபதி சார்ந்த கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால்! நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம், மகிந்த அன்கம்பனி முடக்கிய பணத்தை நாட்டுக்கு கொண்டு வருவோம், மத்திய வங்கி பிணை முறி குற்றவாளிகளை கைது செய்வோம், பயங்கரவாதச்சட்டத்தை நீக்குவோம் என்றெல்லாம் வாய்சவாடல் விட்டார்கள்.
ஆனால் எதுவும் நடக்காது காரணம் நாளை இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டால் இதே குற்றங்களுக்காக சிறை செல்லாமல் இருக்க கையாளப்படும் உக்கிதான் கடந்த ஆட்சியாளர்களை காப்பாற்றுவது. இங்கு காலம் காலமாக ஏமாறுவது நம்பி வாக்களித்த மக்கள்தான்.
வேண்டுமானால் மக்களை ஏமாற்றுவதற்கு இராணுவ புலனாய்வுப் இயக்குனராக இருந்த சுரேஷ்சாலே, திட்டங்களுக்கு வலுச்சேர்த்த பிள்ளையான் போன்றோர் கைது செய்யப்படலாமே தவிர மாற்றும் படி எதுவுமே இந்த ஆட்சியில் நடக்கப்போவதில்லை.
மக்களை ஏமாற்றுவதற்காக தீர்வை இல்லாமல் நாட்டிற்க்குள் வந்த பத்து சொகுசு வாகனங்களை மக்களுக்கு காட்சி படுத்துவதிலேயே காலம் போய் அடுத்த தேர்த்தல் வந்துவிடும்.
குறைந்தது தனது 80000 ஆயிரம் தோழர்களை அல்லது தனது கூடப்பிறந்த சகோதரரை கொன்ற கடந்த கால அதிகாரிகளையாவது விசாரணை கூண்டில் நிறுத்துவாரா அனுர என்றால் இல்லை என்பதே பதில்.
மிக் விமான கொள்வனவு ஊழலை வெளியே கொண்டு வந்த சண்டே ரைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் "லசந்த விக்கிரமசிங்க" உட்பட 35 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கோ அல்லது தமிழர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கோ நீதி கிடைக்கும் என்றால் இல்லை.
காரணம் பெரும்பான்மை இன மக்கள் எப்படி இருந்தாலும் அவர்கள் தாங்கள் ஒரு இனம் என்பதில் உறுதியாக உள்ளார்கள். அவர்களுக்கு பொது எதிரி சிறுபான்மை இன மக்கள் அதில் அவர்கள் உறுதியாக உள்ளார்கள்.
அதனால் தங்கள் அரசு செய்யும் தவறுகளை அவர்கள் ஏற்கதயாராக உள்ளார்கள். உதாரணமாக பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி மாறிய கையோடு தங்கள் எதிர்க்கட்சிகளை வேட்டையாடி சிறையிட்டு மரணதண்டனை வரை கொடுத்து தங்கள் ஆட்சி நேர்மையானது என்று காட்ட முனைவார்கள்.
எங்களது நாட்டில் மட்டும் எந்த ஆட்சி மாறினாலும் கடந்த கால திருடர்கள் சிறைக்கு போன வரலாறே இல்லை. இலங்கையில் யார் வந்தாலும் எதுவும் மாறப்போவதில்லை.