கொழும்புக்கு திடீரென இடமாற்றப்பட்ட வடக்கு பணிப்பாளர் விமலன்! பின்னணி இதுதானா?
எவ்வித காரணமும் இன்றி திடீரென காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வட மாகாண உதவி பணிப்பாளர் தில்லையம்பலவாணர் விமலனுக்கு கொழும்புக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட செயலக வளாகத்துக்குள் இயங்கிவரும் இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வட மாகாண அலுவலகத்தின் பணிப்பாளராக விமலன் கடமையாற்றி வந்தார்.
இவ்வாறான நிலையில், காரணங்கள் ஏதும் கூறப்படாமல் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் கொழும்பு தலைமை அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுமாறு மின்னஞ்சல் மூலம் இடமாற்றக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அண்மையில் வடக்கில் உள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு பளைப் பகுதியில் அரச காணிகளை வழங்குமாறு மேலிடத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பகிர்ந்தளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.
தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து கட்சி ஆதரவாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் வடக்கில் உள்ள அரச காணிகளை வழங்குவதற்காக திட்டங்கள் தீட்டப்படுகின்றனவா என்ற சந்தேகங்களும் ஏற்படுகிறது.
இதன் பின்னணியில் குறித்த பணிப்பாளரை மாற்றி வடக்கில் உள்ள அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு காணிகளை பகிர்ந்து அளிப்பதற்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரிடம் ஏற்பட்டுள்ளது.