அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ; அசத்தும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா! (Photos)
இந்தியாவின் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய அமெரிக்காவுடன் ஜனவரி 11ஆம் திகதி இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
ஐக்கிய கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டியும் "இருதரப்பு நெறிமுறை ஒப்பந்தத்தில்" கையெழுத்திடும் விழா நெவார்க் நகர அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இருதரப்பு ஒப்பந்தம்
அத்துடன் , நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் நெவார்க் நரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
மேலும் பேரிடர், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது, மேலும், மனநலப் பிரச்னைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பரஸ்பர உதவி சார்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகின்றது .
நெவார்க் நகரம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும், மேலும் நியூயார்க் பெருநகரப் பகுதிக்குள் இரண்டாவது பெரிய நகரமாகும்.
கடந்த 2020 யுனைடெட் ஸ்டேட்ஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 311,549 ஆகும், இது நாட்டின் 66 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும்.
அதோடு நெவார்க் அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்று என்பதுடன் இந்த நகரம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.
நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமானது அமெரிக்காவின் முதல் முனிசிபல் வணிக விமான நிலையமாகும்.
அதேவேளை பல பாலியல் குற்றசாட்டுக்கள் தொடர்பில் இந்தியாவில் தேடப்படும் நபராக சாமியார் நித்தியானந்தா அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.