புது மண தம்பதியின் மணவாழ்க்கையை முறித்த விரல் சூப்பும் பழக்கம்!
திருமணமாகி நூறு நாட்கள் கூடக் கடக்காத நிலையில், விரல் சூப்பும் பழக்கத்திற்காகப் புதுமணத் தம்பதியினர் விவாகரத்து வரை சென்றுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கான்பூரைச் சேர்ந்த இந்த ஜோடியின் பிரிவுக்கான காரணம், சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த 27 வயதான சப்னா மற்றும் மணீஷ் ஆகியோருக்கு கடந்த ஜனவரி மாதம் (2026) உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

சிறுவயது முதலே தூக்கத்தில் 'விரல் சூப்பும்' பழக்கம்
ஆரம்ப நாட்களில் இந்த ஜோடி மிகவும் அன்யோன்யமாகவே இருந்துள்ளது. தேனிலவுப் பயணம், விலை உயர்ந்த பரிசுகள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மகிழ்ச்சியான புகைப்படங்கள் என இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே மணீஷ் ஒரு விசித்திரமான சிக்கலை எதிர்கொண்டார்.
சப்னாவுக்கு சிறுவயது முதலே தூக்கத்தில் 'விரல் சூப்பும்' பழக்கம் இருந்துள்ளது. இது ஒரு உளவியல் ரீதியான பழக்கமாகக் கருதப்பட்டாலும், திருமணத்திற்குப் பிறகும் சப்னா அதனைத் தொடர்ந்துள்ளார்.
இரவு நேரங்களில் தனது மனைவி இவ்வாறு செய்வது மணீஷுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. "இந்த வயதில் இப்படியா?" என அவர் பலமுறை சப்னாவிடம் முறையிட்டதுடன், இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், ஆழ்ந்த உறக்கத்தில் அறியாமல் நடக்கும் இந்தச் செயலை சப்னாவால் உடனடியாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தப் பிரச்சனை நாளடைவில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமாக மாறியது.
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மணீஷ், இந்தப் பழக்கத்தை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். குடும்பப் பெரியவர்கள் முன்னிலையில் பலமுறை சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. "
இது ஒரு சிறிய விஷயம், இதற்காகப் பிரிவது முறையல்ல" என உறவினர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும், மணீஷ் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. மனைவியின் இந்த 'சிறுபிள்ளைத்தனமான' செயல் தனது கௌரவத்திற்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையூறாக இருப்பதாக அவர் வாதிட்டு விவகாரம் விவாகரத்துக்கு கோரி நீதிமன்றப் படி ஏறியுள்ளது.