சித்திரை புத்தாண்டு விடுமுறை; சமூகவலைத்தளவாசிகளுக்கு எச்சரிக்கை!
நாட்டில் சித்திரை புத்தாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காக வீடுகளை விட்டு வெளியேறுவோர், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இணையத்தளங்களில் பகிரப்படும் பதிவுகள் திருட்டுச் சம்பவங்களுக்கு வழிவகுக்கக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார் , சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்
அதன்படி, நீங்கள் வீட்டை விட்டு வெளியே இருக்கும் போது, இருக்கும் இடத்தை (Check-ins) உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறான பதிவுகள் உங்கள் வீடு ஆளில்லாமல் இருப்பதை திருடர்களுக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றுப்பயணங்கள் அல்லது கொண்டாட்டங்களின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை, அந்த இடத்திலேயே இருக்கும் போது பதிவிடாமல், வீடு திரும்பிய பின்னர் பதிவிடும் 'Later-gram' முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற தளங்களில் தாங்கள் வீட்டில் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலான தகவல்களைப் பகிர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமது டிஜிட்டல் வழித்தடங்கள் (Digital Footprints) மூலம் வீட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொதுமக்களிடம் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.