புலம்பெயர் தேசம் மற்றும் இந்தியாவில் உதயமாக உள்ள புதிய தமிழ் அரசுக் கட்சி
புதிய தமிழ் அரசுக் கட்சி உதயமாகிறது? இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட்டு புதிய தமிழ் அரசுக் கட்சியை உருவாக்க நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, தமிழ் அரசுக் கட்சியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இதற்கு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
'அரங்கம்' இணையத் தளத்தில் அழகு குணசீலன் என்ற பெயரில் வெளியா கும் 'வெளிச்சம்' என்ற தொடர் கட்டுரையிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதிய தமிழரசு அப்புக் காத்து அரசியலுக்கு முடிவு கட்டுமா?" வெளிச்சம் என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், "தமிழ் அரசின் சமகால தலைமைகளால் அந்தக் கட்சி தப்பிப்பிழைக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பும் நிலையிலேயே புதிய தமிழ் அரசு ஒன்றை உருவாக்குவது குறித்து இலங்கை, இந்திய, புலம் பெயர்ந்த நாடுகளின் தீவிர தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் இரவுபகலாக ஆலோசித்து வருகின்றனர் என்று தெரிய வருகிறது.
மருத்துவர் சத்தியலிங்கத்தின் தேசிய பட்டியல் நியமனம், சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக இருந்து விடுதலைப்புலிகளால் துரோகி என்று சுட்டுக்கொல்லப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் வலதுகரமாகவும், முதுகெலும்பாகவும் செயல்பட்ட சீ. வீ. கே. சிவஞானம் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை,
பதில் செயலாளர் சத்தியலிங்கத்துக்கு சுகவீனம் என்க் கூறி பதில் செயலாளர் பதவியை சுமந்திரன் சுருட்டி இருப்பது போன்ற காரணங்களால் இனியும் தமிழ் அரசை திருத்த முடியாது என்ற நிலைக்கு தமிழ்த் தேசிய தீவிர சக்திகள் வந்துள்ளன.
இவையே புதிய தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கக் காரணம். "தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கில் நால்வரும் வடக்கில் இருவரும் 'புதிய தமிழ் அரசு' அமைவதில் உடன்பாடுடையவர்களாக இருக்கின்றனர் என்று தமிழ்நாட்டில் உள்ள மூத்த தமிழ்த் தேசியவாதியின் வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.
"சுமந்திரன் அணியைச் சேர்ந்த சாணக்கியன், சத்தியலிங்கத்தை தள்ளி வைத்து இந்தத் திரைமறைவு முயற்சிகள் இடம்பெறுகின்றன. கிழக்கின் தெற்கு எல்லையைச் சேர்ந்த பி2பி செயல்பாட்டாளரும் தமிழ் அரசுக் கட்சி தந்தையின் பேரனும் இந்தத் திரைமறைவு முயற்சிகளில் முக்கியமானவர்.
இவ்வாறு புதிய தமிழ் அரசுக்கு பின்னால் நாட்டில், தமிழக, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மூத்த தமிழ்த் தேசியவாதிகளும், ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.
தமிழ் அரசு தந்தையின் பெயரை கட்சிப் பெயரில் சேர்த்துக் கொள்ளலாமா? என்றும் ஆலோசிக்கப் படுவதாக தகவல் ஒன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது