ஒமிக்ரோன் வைரஸிற்கான புதிய அறிகுறிகள்
நாடு மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிட்டளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் நிறுவகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நீண்ட விடுமுறை மற்றும் அதிக பயணங்களை மேற்கொள்வதன் காரணமாகவே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலைமையில் நாடு முழுவதும் ஒமைக்ரோன் கொவிட் வைரஸ் திரிபு வேகமாக பரவி வருவதாகவும், நாளாந்தம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட அதிகளவானோர் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு வழமைக்கு திரும்பியிருக்கும் நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலை தொடருமானால், ஒமைக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும், இதன் மூலம் நாட்டில் அதிகளவில் பரவும் வைரஸ் திரிபாக ஒமைக்ரொன் மாற்றமடையக்கூடும் எனவும் விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஒமைக்ரொன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். ஒமைக்ரொன் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல் / தடிமன் மற்றும் இலேசான தொண்டை நோவு போன்ற சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படாது என்பது மற்றொரு முக்கிய விடயமாகும்.