சி.டி. விக்ரமரத்னவின் இறுதி நாட்கள் குறித்த ரகசியங்கள் வெளியீடு!
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மறைவுக்கு முந்தைய இறுதி நாட்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மறைந்திருந்த சில சுவாரசியமான தகவல்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விக்ரமரத்ன பணி ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, தான் பல வருடங்களாக அணிந்து நாட்டுக்குச் சேவை செய்த காவல்துறை சீருடையைத் துண்டு துண்டாகக் கிழித்து களனி கங்கையில் வீசியுள்ளார்.
காவல்துறையுடனான எனது பிணைப்பு இத்துடன் முடிந்துவிட்டது, நான் இப்போது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன்" எனக் கூறிக்கொண்டே விக்ரமரத்ன இந்தச் செயலைச் செய்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் தனது மரணத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு கதிர்காமம் புனித பூமிக்குச் சென்று சிறப்புப் பூஜைகளை நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
அவர் விஷ்ணு பகவான், கதிர்காமக் கந்தன் மற்றும் சமன் தெய்வங்கள் மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்றும், தினமும் தியான வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர, மஹியங்கனை (பிந்தென்ன) பகுதியில் உள்ள பிராந்திய வழிபாட்டு முறையான 'லொகு மேனியன்' வழிபாட்டிலும் அவர் தீவிர ஆர்வம் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பிறகு, விக்ரமரத்ன தனது காலத்தை முழுமையாக ஆன்மீக மற்றும் கல்விச் சார்ந்த பணிகளுக்காகவே அர்ப்பணித்திருந்தார்.
குறிப்பாக, 'இராவண வரலாறு' மற்றும் 'சிங்கள பௌத்த தேவ புராணம்' ஆகிய தலைப்புகளில் இரண்டு ஆராய்ச்சி நூல்களை அவர் எழுதி வந்ததாகவும் இணைய ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.