இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய நெருக்கடி ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரு பெரும் சோதனையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக உத்தரவு அமைந்துள்ளது.
ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது 25 சதவீத மேலதிக வரியைச் செலுத்த வேண்டும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் பிரதான ஏற்றுமதியில் ஒன்றான தேயிலையைக் கொள்வனவு செய்யும் முதல் பத்து நாடுகளில், ஈரானும் ஒன்றாக உள்ளது. மாதாந்தம் சுமார் 9,800 மெட்ரிக் தொன் தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
அதேநேரம், இலங்கை ஏற்றுமதியின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா திகழ்கின்றது.
இதன்படி, மொத்த ஏற்றுமதியில் 25 சதவீத பங்கைக் கொண்டுள்ள அமெரிக்கா மூலம், ஆண்டொன்றுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கின்றது.
இந்தநிலையில் 'ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தகங்களுக்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்' என ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கை பொருட்கள் மீது 20 சதவீத வரி அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேலதிக 25 சதவீத வரி அமுல்படுத்தப்பட்டால், அமெரிக்க நுகர்வோருக்கு இலங்கை பொருட்களின் விலை கணிசமாக உயரும்.
இது இலங்கையின் ஏற்றுமதி வருவாயைக் குறைப்பதோடு, உலக சந்தையில் இலங்கை பொருட்களின் போட்டித்தன்மையையும் பாதிக்கும் என 'அருதா' (Arutha Research) ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.