யாழில் வெடிக்கும் புதிய சர்ச்சை ; மதுபானசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பணம் உரிய பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பல அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

அனுமதிகள்
அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிகள் ஏற்கனவே மதுபான விற்பனை அனுபவம் கொண்டவர்களிடம் கோடிக்கணக்கான பெறுமதிகளுக்குக் கைமாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைமாறிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றவர்கள் புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்களின் கடுமையான எதிர்ப்புத் காரணமாகச் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டன.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மதுபானசாலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மதுபானசாலை உரிமையாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிட்டியதைத் தொடர்ந்து, அந்த அனுமதிகளை வழங்குமாறு கோரி அதற்கான பணத்தைச் செலுத்துவதற்காகச் சம்பந்தப்பட்டவர்கள் நேற்று பிரதேச செயலகங்களை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சங்கானை, கோப்பாய், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு பிரிவு தவிர்ந்த ஏனைய 3 செயலகங்களில் நேற்று பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 4 ஆவது செயலகத்திலும் இன்று பணம் செலுத்தப்படலாம் எனத் தெரியவிக்கப்படுகின்றது.