புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி
இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.பி. ஜயரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இன்று (3) ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பு பேரவை
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த பரிந்துரையை பரிசீலித்த பேரவை, இந்தப் பதவிக்கு எல்.எஸ்.பி. ஜயரத்ன பொருத்தமானவர் என ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்து, சுமார் 10 மாதங்களாக இந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.
முன்னதாக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.