இந்தியாவில் உருவானது புதிய கூட்டணி: கதிகலங்கியுள்ள ஒட்டுமொத்த பா.ஜ.க
இந்தியாவில் சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, இப்போதே உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது. உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், (Rahul Gandhi) காங்.பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், (Priyanka Gandhi Vadra) உ.பியில் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பா.ஜ.கவும் போராடி வருகிறது.
இதேவேளை, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால், அது பா.ஜ.கவுக்கு சாதமாகிவிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தேசிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதனையடுத்து, பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவது இல்லை எனத் தெரிவித்திருந்தது. இதனால், பா.ஜ.க தங்களது எதிர்ப்பு வாக்குகள் சிதறும் என எதிர்பார்த்தது. ஆனால், ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், அகிலேஷ் யாதவும் ஜெயந்த் சவுத்ரியும் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தனர். இதன் அடுத்த கட்டமாக, இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அகிலேஷும், ஜெயந்த் சவுத்ரியும் இணைந்து வெளியிடுள்ளனர்.
மேலும், ஜாட், முஸ்லிம்கள் அதிகமுள்ள மேற்கு உ.பி.யில் பா.ஜ.கவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், மேற்கு உத்தர பிரதேசத்தில் வலுவாக உள்ள ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சிறுபான்மையினர் மற்றும் விவசாயிகள் பா.ஜ.க அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜ.க தலைமையும், உ.பி முதல்வர் ஆதித்யநாத்தும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.