புதிய கூட்டணியால் தமிழரசுக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை ; எம்.ஏ.சுமந்திரன்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து மாவட்ட கிளை உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறது.
அந்த வகையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் மன்னார் மாவட்ட கிளையுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
மன்னாரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் எவ்வாறு அணுக முடியும் எனவும்,
தேர்தலின்போது வெவ்வேறு அணிகளாக செயற்படுகின்ற போதிலும் ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது இணைந்து செயற்படக்கூடிய வகையில் தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய கூட்டணியால் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கிளையுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.