யாழ். சர்வதேச விமான நிலையத்தை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்! என் தெரியுமா?
யாழ். நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பலாலி பகுதியில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதிஅமைச்சர் அசோக் அபேசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விமான நிலைய திறப்பு விழா அன்று உத்தியோகபூர்வமாக சென்னையில் இருந்து முதலாவது விமானம் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பெரும் எடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விமான நிலையத் திறப்பு விழாவினை யாழ் மக்களும் மிகவும் மகிழ்வுடன் கண்டுகளித்ததுடன் தமிழர் தாயகத்திலும் ஒரு சர்வதேச விமான நிலையமொன்று உருவாகியுள்ளது என அக மகிழ்ந்தனர்.
இவ்வாறான நிலையில் யாழ் விமான நிலையத்திலிருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கான நேரடி விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் துறைசார் அதிகாரிகளும் அறிவிப்புக்களை விடுத்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த 2019ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இவ் விமான நிலையம் இன்று வரை வெறிச்சோடிய நிலையிலேயே காணப்படுகின்றது.
இடையிடையே அரச தரப்பு அமைச்சர்கள் குறித்த விமான நிலையத்தை பார்வையிட்டு வருவதுடன் விரைவில் இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கவுள்ளது.
வேறு சில நாட்டவர்களும் அங்கிருந்து நேரடியாக யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கலாம் என பல்வேறு பட்ட வாய்மூல அறிவிப்புக்களை விட்டிருப்பினும் இன்று வரை எவ்விதமான விமான சேவைகளும் இடம்பெறாமை துரதிஸ்டவசமானதே.
இந்நிலையில் பல பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இவ் விமான நிலையம் இன்று வரை சேவைகள் எதுவும் நடைபெறாது வெறிச்சோடி காணப்படுகின்மை தொடர்பில் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
யாழ் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு இன்றையதினம் 3வது வருடத்தை பூர்த்தி செய்த நிலையில் இன்று பலாலி விமான நிலையத்தில் சிறிய சமய வைபவமும் கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிலையில் விமானமே வராத விமான நிலையத்தில் எதற்கு கேக் வெட்டி கொண்டாடுகின்றார்கள் எனவும் ஆளே இல்லாத டீ கடையில் யாருக்கு டீ ஆத்துகிறார்கள் என குறித்த நிகழ்வுகளை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.