திருமண ஆசை காட்டி பெண்கள் வெளிநாட்டில் விற்பனை!
நேபாளத்தில் வறுமையில் வாடும் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவர்களைச் சீனாவுக்குக் கடத்திச் சென்று விற்பனை செய்யும் தகவல் அம்பலமாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், சீனாவில் முன்பிருந்த ஒரு குழந்தை கொள்கை காரணமாக அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட பல கோடிகள் அதிகமாக உள்ளது.

மனிதக் கடத்தல் கும்பல்கள்
இதனால் சீன ஆண்களுக்குத் தங்கள் நாட்டில் மணப்பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில் மனிதக் கடத்தல் கும்பல்கள், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து பெண்களைச் சீனாவுக்குக் கடத்துகின்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களை இலக்கு வைக்கும் தரகர்கள், சீனாவில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் கைநிறைய ஊதியம் கிடைக்கும் வேலை என ஆசை வார்த்தைகளைக் கூறி பெண்களைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கின்றனர்.

இந்த கும்பலை சேர்ந்த சீன ஆண்கள் நேபாளத்திற்கு வந்து சட்டப்படித் திருமணம் செய்து கொள்வது போல நாடகமாடி, சுற்றுலா விசாவில் பெண்களைச் சீனாவுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
சீனா சென்றடைந்த பின்னர், பெண்கள் அங்கிருக்கும் மற்ற ஆண்களுக்குப் பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்படுகின்றனர்.
இந்த விவகாரத்தில் சீனக் குடிமக்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய நேபாளத் தரகர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.