நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 25 பெண் உட்பட 106 பேருக்கு விளக்கமறியல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 25 பெண்கைதிகள் புதிதாகச் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
குறித்த வழக்கு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் வியாழக்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்
சம்பவம் தொடர்பில் இதுவரை 81 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் அடங்கலாக மொத்தம் 106 பேர் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், குறித்த பெண் சந்தேக நபர்களுக்கு எதிராகப் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதால் வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், புதிதாகப் பெயரிடப்பட்ட பெண் சந்தேக நபர்களையும், 30ஆம் இலக்கம் முதல் 60ஆம் இலக்கம் வரை பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும், சாட்சியாளர்களான 20 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
நேற்றைய தினம் 23 சந்தேக நபர்கள் (இலக்கம் 7 முதல் 30 வரை) அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சாட்சியாளர்களாக ஆஜரான சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்கிய நீதிவான், சந்தேக நபர்கள் 106 பேரையும் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
மேலும், அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தாத ஏனைய சந்தேக நபர்களை நிகழ்நிலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 20 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.