இயற்கையாக ரத்த சர்க்கரையை குறைக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான ஆயுர்வேத பானங்கள்
நீரிழிவு என்பது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது ஏற்படும் ஒரு நாள்பட்ட நோயாகும்.
இந்த நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று உணவு கட்டுப்பாடு.
அதாவது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் தாங்கள் உண்ணும் உணவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், தெரியாமல் சாப்பிடும் உணவுகள் கூட இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கலாம். இரத்த சர்க்கரையை சில ஆயுர்வேத பானங்கள் மூலமும் இயற்கையாக கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் இரத்த சர்க்கரையை குறைப்பதில் பெயர் பெற்றது. காரணம், பாகற்காயில் இயற்கையாகவே இன்சுலின் போன்று செயல்படும் 'பாலிபெப்டைட்' என்ற கலவை, கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு ஆகியவை உள்ளன. எனவே, தினமும் பாகற்காய் ஜூஸ் தயாரித்து குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கலாம்.
வேப்ப இலை ஜூஸ்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும் ஆற்றல் வேப்பம் பூவுக்கு உண்டு. காரணம் இதில் உள்ள ஒரு பிரத்யேக மருத்துவ குணம் கொண்ட ரசாயனமே. ஒரு கப் கொழுந்து வேப்ப இலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து சாறாக்கி அதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடித்துவரலாம்.
நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காயில் பல அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. இவை இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதன் மூலமும், செல்கள் மூலம் குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரிப்பதன் மூலமும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பத்துகிறது. 2-3 நெல்லிக்காய்களை வெட்டி அதன் விதைகளை நீக்கிவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மிருதுவான பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து வடிகட்டாமல், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
மூலிகை டீ
மூலிகை டீ வகைகளில் லவங்கப்பட்டை டீயும் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. ஒரு கப் சுடு தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள், அத்துடன் 3-5 லவங்கப்பட்டை துண்டுகளை சேர்த்து அப்படியே மூடி வைக்கவும். 10 நிமிடங்களுக்கு பிறகு லவங்கப்பட்டையை எடுத்துவிட்டு, அந்த தண்ணீரை மட்டும் தினமும் இரவில் உணவிற்குப் பிறகு குடித்துவரலாம். இதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமப்படுத்தலாம். குறிப்பு: இந்த ஆயுர்வேத பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகின்றன. இருப்பினும், நீங்கள் ஏற்கனவே நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், இந்த பானங்களை முயற்சிப்பதற்கு முன், முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்.