அதிகாலையில் ஏலக்காயுடன் வேனில் சென்ற இந்தியப் பிரஜைகளுக்கு நடந்த சம்பவம்
சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான ஏலக்காய் மற்றும் 40 வெளிநாட்டு மதுபானப் போத்தல்களை வேன் ஒன்றில் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், இரண்டு இந்தியப் பிரஜைகள் உட்பட மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குரன பகுதியில் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட நடவடிக்கை
சந்தேகநபர்கள் பயணித்த வேனைச் சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்த 244 கிலோ 320 கிராம் நிறையுடைய சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏலக்காயையும், 40 போத்தல் வெளிநாட்டு மதுபானங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 35 மற்றும் 47 வயதுடைய இரண்டு இந்தியப் பிரஜைகளும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இலங்கையர் ஒருவரும் அடங்குகின்றனர்.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கைதான மூன்று சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.