பேராதனை, களுகமுவ பாலங்களில் சிக்கியிருந்த கழிவுகளை வெற்றிகரமாக அகற்றிய கடற்படை
வெள்ளம் காரணமாக பேராதனை கருப்பு பாலம் மற்றும் களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை கடற்படையினர் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
"டித்வா" சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தமையால், நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய மரக்கட்டைகள் மற்றும் விறகுகள் உள்ளிட்ட குப்பைகள் பேராதனையில் உள்ள கலுபாலம் ரயில் பாலத்திலும், நில்லம்பவில் உள்ள கலுகமுவ பாலத்திலும் சிக்கி, அந்தப் பாலங்கள் வழியாக நீர் வெளியேறுவது தடைப்பட்டிருந்தது.

பராமரிப்பு பணிகள்
இந்நிலையில், கடற்படை சுழியோடி உதவி மற்றும் அந்தப் பாலங்களை புனரமைப்பதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கைகள் கடந்த 14 மற்றும் 17ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

வெள்ளம் காரணமாக பேராதனை, கலுபாலம் ரயில் பாலத்தில் உள்ள தடைகளை அகற்றுவதற்காக கடற்படை கடந்த 4ஆம் திகதி முதல் விசேட கடற்படை சுழியோடிக் குழுவின் உதவியை வழங்கி வருகிறது.

அதன்படி, இலங்கை ரயில்வே திணைக்களத்தின் உதவியுடன், கடற்படையின் சுழியோடி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் சுமார் இரண்டு வாரங்கள் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைக்குப் பின்னர், களுபாலத்தில் சிக்கிய மரக்கட்டைகள் மற்றும் பெரிய மூங்கில் புதர்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.
இதனால் பாலத்தின் வழியாக நீர் தடையின்றி வெளியேறியதுடன், இதன் மூலம் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு தனது எதிர்கால பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள முடிந்தது.