மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு நாமல் அஞ்சலி
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (01)அஞ்சலி செலுத்தினார்.
அதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி தனது இறுதி அஞ்சலியை இன்று (01) செலுத்தினார்.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று(31) மாலையில் அஞ்சலி செலுத்தியதுடன், எம்.ஏ.சுமந்திரன் இன்று (01) காலை 7:00 மணியளவில் அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பேராசிரியர் விமல் சுவாமிநாதன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
எம்.கே.சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர், ஆளுநர் நா.வேதநாயகன், தமிழரசுக்கட்சி செயலாளர் (கொழும்பு கிளை) சி.கமலநாதன், பொ.ஐங்கரநேசன், ஆகியோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் உடல்நிலை பாதிப்பால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா கடந்த 29ஆம் திகதி சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் உயிரிழந்திருந்தார்.
மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.