வடக்கு மக்கள், புலம்பெயர் அமைப்புகளை கவர அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகிறது ; நாமல்
வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(5) நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யுத்தத்தை வென்றவர்கள்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் கூற முடியவில்லை. எமது நாட்டில் குறைந்தது. இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள், பங்களிப்புகள் தொடர்பில் பெருமையாக அரசாங்கத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளுடன் தான் யுத்தம் செய்தோம். இராணுவத்தினர் தொடர்பில் ஆட்சியாளர்களால் பேச முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கதைத்து பலனில்லை.
அத்துடன் மதத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மதத்தலைவர்களை அவமதிக்கின்றனர். இது தவறாகும். தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதத் தலைவர்களுக்கு செவி சாய்க்க அரசாங்கம் பழக வேண்டும். மகா சங்கத்தினரை சிறைகளில் போடுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தில் ஹர்த்தால் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சியாளர்கள் அதனை காணாதது பேன்று செயற்படுகின்றனர். இனவாதத்தை தூண்டமாட்டோம் என்று ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர்.
பெரும்பான்மையினத்தவரை விமர்சிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களையும், வடக்கு மக்களினதும் மனங்களை வெற்றிக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு செய்யவும் முடியாது.
சுதந்திர தினத்தில் கடனுக்கு பெற்ற ஆயுதங்கள், யுத்த தளவாடங்களை கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப்களை வாங்க முடியும். எமது தேசிய பாதுகாப்பு பலத்தை உலகத்துக்கு காட்டுவதில் வெட்கப்படுகின்றனர் என்றார்.