நீதித்துறை விவகாரங்களில் ஜனாதிபதி யாரைக் கலந்தாலோசிக்கிறார்!
நீதித்துறையின் செயற்பாடுகள் மற்றும் அதன் வரம்பெல்லைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து பல்வேறு தரப்பினரின் அவதானமும் திரும்பியுள்ள பின்னணியில், இந்தச் செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நீதித்துறை அமைப்பில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்வது குறித்து கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இத்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட பல நிபுணர்கள் நாட்டிலிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சீர்திருத்தங்களின் போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காமன்வெல்த் மற்றும் பிராந்திய சட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்புகள் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடும் போது, இரு தரப்பினரின் கருத்துகளும் சமநிலையாக முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.