பிரதமரின் முடிவை வரவேற்ற நாமல் ராஜபக்ஸ
பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளுமன்றத்தைக் கூட்ட எடுத்த முடிவை நான் மனதார வரவேற்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஸ சமூகவலைத்தள பதிவில்,

18 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் பார்வையிட்டபோது, கடந்த சில நாட்களாக தமது வீடுகளையும், வாழ்வாதாரத்தையும், ஏன் உணவு மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் கூட இழந்த குடும்பங்களைச் சந்தித்தேன்.
இந்தச் சூழலில், ஒவ்வொரு சமூகத்தையும் உதவி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளது.
இந்தத் தருணம் அரசியலைப் பற்றியதல்ல, மக்களைப் பற்றியது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.