சிறையில் ஒன்றாக அடைக்கப்பட்ட நாமல் ராஜபக்க்ஷ மற்றும் ரேணுகா பெரேரா
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேராவும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்காள் தெரிவிக்கின்றன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளருமான ரேணுக பெரேரா, தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அரச ஊழியர்கள் உட்பட சுமார் 10 கைதிகள்
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேரா, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக வழங்கியமை தொடர்பிலேயே அவர் மீது இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகள் மற்றும் 2014 செப்டம்பர் 19 ஆம் திகதிய அமைச்சரவை முடிவின் பரிந்துரைகளுக்கு முரணாகச் செயற்பட்டு, சட்டக் கட்டமைப்பிற்கு அப்பாலும் வருடாந்தக் கட்டணங்களை முன்கூட்டியே அறவிடாமலும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதே ரேணுக பெரேரா மீதான முக்கிய குற்றச்சாட்டாகும்.
ரேணுக பெரேரா அச்சிறைச்சாலையின் 'N' வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச ஊழியர்கள் உட்பட சுமார் 10 கைதிகள் அந்த வார்டில் உள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அதே வார்டிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்யும் செயல்முறையின் போது சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேவேளை நாமல் ராஜபக்ச இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.