NPP ஏமாற்றிவிட்டது; இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கும் நாமல் ராஜபக்ஷ
அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது என்றும், சிறந்த அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதற்கு இளைஞர்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
களனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது நாமல் ராஜபக்ஷ மேலும் கூறுகையில்,

மக்களின் எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது
நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை நாங்கள் நெருக்கடிக்குள்ளாக்கவில்லை. மாறாக மக்களுக்கு வழங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறே வலியுறுத்துகிறோம். மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தினார் என்பதை எவராலும் மறுக்க முடியாது .
பல்வேறு காரணிகளால் திட்டமிட்ட வகையில் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய எவ்வித திட்டங்களையும் அரசாங்கம் செயற்படுத்தவில்லை.
கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கு சீகிரியா குன்றையும் பெயர்த்தெடுக்க வேண்டும் என்றார்கள். தற்போது துறைமுக நகரம் உருவாக்க்பட்டுள்ளது.ஆனால் சீகிரியா குன்று அழிக்கப்படவில்லை.
கொழும்பு துறைமுக நகரத்தில் இருந்து உச்சபலனை பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் சகல திட்டங்களையும் விமர்சிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை.
சிறந்த திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இலங்கைக்கே உரித்தான பொருளாதார அம்சங்களுடன் தான் நாடு என்ற ரீதியில் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
அதற்கான திட்டங்களை எமது ஆட்சியில் நாங்கள் செயற்படுத்துவோம் என்றும் நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.