ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் ; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு தொடர்பில் நாமல் விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
முன்னாள் ஜனாதிபதியின் கைது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லையா? அதன்மூலமே சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாங்கள் ஒன்று சேருவதற்கு யாரும் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது ஜே.வி.பியின் நிலைப்பாடாகும். அவர்கள் ஒன்று சேருவதற்கு தான் போராட்டம் வேண்டும்.
அவர்கள் ஒன்று சேருவதற்கு தீ வைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தற்போது செயற்படுவது தங்களது கட்சிகளின் சுயநலனுக்காக அல்ல.
மாறாக நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு ஆகும். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என சொல்லப்படுவது போல நண்பர் யார்? எதிரி யார்? என்பதை நினைத்துப்பார்க்க முடியாது.
2005 ஆம் ஆண்டில் நாம் ஜே.வி.பியின் நண்பர்கள், 2015 இல் ரணில் ஜே.வி.பியின் நண்பர், 2022 இல் நாம் ரணிலின் நண்பர், 2025 இல் ரணில் ஜே.வி.பிக்கு எதிரியாகியுள்ளார். மக்களே யார் நண்பர்? யார் பகைவர் என்ற குழப்பத்தில் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொிவித்துள்ளார்.