முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழல் இடம்பெறுகிறதா?
முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழல் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
பாரஊர்திகள் கூட்டுறவு சங்கத்தின் முறிகண்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாவிற்கும், கார்களுக்கு 2000 ரூபாவிற்கும் பெற்றோல் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சில வாகனங்களிற்கு மட்டுப்படுத்தப்படாத வகையில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளமை உறுதியாகியது.
இது தொடர்பில் நிலைய முகாமையாளருக்கு தெரியப்படுத்திய போது அம்முறைப்பாட்டை தட்டிக்கழிக்க முற்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் பணியில் இருந்த நபரை அழைத்து விசாரித்த பொழுது கார் உரிமையாளர் முகாமையாளரையே கேட்டதாகவும், அவர் இல்லை என்று சொல்லியதுடன், வெளியே சென்று திரும்பி வருமாறு தான் கூறியதாகவும் முகாமையாளர் முன் கூறியுள்ளார்.

முகாமையாளர் வந்ததும் மீண்டும் குறித்த காரிற்கு 2000 ரூபாவிற்கு பெற்றோல் வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விடயம் தொடர்பில் கேட்ட ஊடகவியலாளரை தரக்குறைவாக பேசியதுடன் வெளியே செல்லுமாறும் அநாகரிகமாக பேசியுள்ளார்.
பொதுமக்களின் குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை குறித்து ஆராய சென்ற ஊடகவியலாளர் முகாமையாளரால் அவமானப்படுத்தப்பட்டமை தொடர்பில் கூட்டுறவு ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு முறையிடப்பட்டுள்ளதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
இந்த சம்பவத்தை மறைக்க முற்பட்ட முகாமையாளர் கையூடு பெறுகின்றாரா என்ற மக்களின் சந்தேகம் வலுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.