கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலையின் பின்னணி!
கொழும்பு மாளிகாவத்தையைச் சேர்ந்த பாத்திமா மும்தாஸ் என்ற இரு பிள்ளைகளின் தாயை உலக்கையால் அடித்துக் கொலை செய்து, சடலத்தை பயணப் பையில் இட்டு, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகே, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடம் ஒன்றில் கைவிட்ட சம்பவம் கடந்தவாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பயணப் பொதியிலிருந்து இதற்கு முன்னரும் சில இடங்களில் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையிலும், அதன் பின்னணிகள் அதிர்ச்சிகளை உருவாக்கியிருந்த நிலையிலுமே இந்தச் சம்பவமும் பொதுமக்களிடையே பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில்தான் இந்தச் சடலம் மீட்பு தொடர்பில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸின் ஆலோசனை பிரகாரம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அர்ஜுன மாஹிங்கந்தவின் வழி நடத்தலில், களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திரத்ன,
பொலிஸ் பரிசோதகர் ரொமேஷ் ரத்நாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் தெஹிதெனிய, ஆகியோருடன் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த குலசேகர, பொலிஸ் பரிசோதகர் எல்.அமரசேகர உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
முதலில் சடலம் அடையாளம் தெரியாதளவுக்கு முகம் சிதைந்திருந்த நிலையில், அடையாளம் காண்பதற்கு பொலிஸாருக்கு 12 மணி நேரத்துக்கும் அதிக காலம் தேவைப்பட்டது.

சப்புகஸ்கந்த பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முதலில் தகவல் சேகரித்த பொலிஸார் பின்னர், அதனை அண்மித்த பியகம உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள அவ்வாறான முறைப்பாடுகளுடன் மீட்கப்பட்ட சடலம் குறித்த தகவல்கலை ஒப்பீடு செய்து பார்த்தனர். மூவர் சடலத்தை அடையாளம் காண ராகம வைத்தியசாலைக்கும் சென்றனர்.
எனினும் அவை எதுவும் பொருந்தவில்லை. இந்நிலையில்தான் பொலிஸ் உள்ளக தகவல் பரிமாற்று வலையமைப்பு ஊடாக சடலம் தொடர்பிலான விடயங்கள் பகிரப்பட்ட நிலையில், மாளிகாவத்தை பொலிஸாருக்கு கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி கிடைக்கப் பெற்றிருந்த முறைப்பாடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்கள் ஒத்துப்போனது.
அதன் பிரகாரமே, அந்த முறைப்பாட்டை அளித்த நபர் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சடலம் அடையாளம் காட்டப்பட்டது. பின்னர், அவரது இரு பிள்ளைகளும் சடலத்தை அடையாளம் காட்டி, பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தமது தாயாரினுடையது என்பதை உறுதி செய்தனர்.
இவ்வாறான நிலையில் ஆரம்பக் கட்ட தகவல்களில், சடலமாக மீட்கப்பட்ட பெண் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்த மொஹம்மட் ஷாபி பாத்திமா மும்தாஸ் எனவும், அவர் இறுதியாக தனது தோழியான ரொஷானா என்பவருடன் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துள்ளமையையும் கண்டறிந்த பொலிஸார் ரொஷானாவை விசாரிக்கலாயினர். இதனையடுத்தே இந்த கொலையின் மர்மங்கள் துலக்கப்பட்டன.
ஆரம்பத்தில் ரொஷானா உண்மையை மறுக்கும் விதமாக பல வாக்குமூலங்களை வழங்க முற்பட்டாலும், பொலிஸார் சேகரித்த அறிவியல் ரீதியிலான சாட்சியங்களுடன் ரொஷானாவால் உண்மையை மறைக்க முடியாமல் போனது.
அதன்படி கொலைக் குற்றச்சாட்டில் முதலில் ரொஷானாவையும் அவரது கணவரையும் கடந்த 6 ஆம் திகதி கைது செய்த பொலிஸார், கொலையின் பின்னர் சடலத்தை கொண்டு செல்ல பயன்படுத்திய லொறியையும் மீட்டனர்.
இந்நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவன் – மனைவி மஹர நீதிவான் கேமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மட்டக்குளியைச் சேர்ந்த மொஹம்மட் சித்தி ரொஷானா (36), சேகு ராஜா கணேஷ் ஆனந்த ராஜா (36) தம்பதியாவர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, 48 மணி நேர தடுப்புக் காவலில் இந்த கணவன் மனைவியை விசாரித்துள்ள பொலிஸார் பல விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
மனைவியான ரொஷானாவிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் பிரகாரம், கொலை செய்யப்பட்ட பாத்திமா மும்தாஸ் கொலை செய்யப்படும்போது அணிந்திருந்ததாக கூறப்படும் தங்க சங்கிலி, காதணி ஜோடி, மோதிரம் ஆகியன செட்டியார் தெருவில் தங்க ஆபரண கடை ஒன்றில் உருக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக சப்புகஸ்கந்தை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தனர்.
இந்த தங்க நகைகளை ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாவுக்கு குறித்த நகைக் கடைக்கு சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பெண் விற்பனை செய்துள்ளதாகவும் இந்நிலையிலேயே உருக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தங்கம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் பின்னர் கைது செய்யப்பட்ட, கொலையின் பிரதான சந்தேக நபர், இந்தக் கொலையை முன்னெடுக்க பயன்படுத்தியதாக கூறப்படும் இரும்பினாலான உலக்கை மற்றும் சடலத்தை சப்புகஸ்கந்த பகுதிக்கு கொண்டு சென்ற முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இந்த முச்சக்கர வண்டியானது, சந்தேக நபரன ரொஷானா எனும் பெண்ணின் மாமனாருக்கு சொந்தமானது என பொலிஸார் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர்.
‘ சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள ரொஷானா எனும் பெண், சமிட் புர பகுதியில் ‘ரத்னா மாமி ‘ என அறியப்படும் ஒருவரின் தங்க வலயல்கள் மற்றும் சங்கிலியை பெற்று அதனை 90 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்துள்ளார்.
அடகு வைத்து பெறப்பட்ட 90 ஆயிரம் ரூபாவில் 50 ஆயிரம் ரூபாவால் கடனை அடைத்துள்ள சந்தேக நபரான ரொஷானா, 30 ஆயிரம் ரூபாவை மும்தாஸிடம் சூதாடி தோற்றுள்ளார்.
இந்நிலையிலேயே அந்த தங்க ஆபரணங்களை மீட்டுத் தருமாறு கூறியே, சந்தேக நபர் ரொஷானா, பாத்திமா மும்தாஸை ( உயிரிழந்த பெண் ) அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிரகாரம் மும்தாஸ், சந்தேக நபரன பெண்ணின் கோரிக்கைக்கு அமைய, குறித்த அடகுக் கடைக்கு சென்று தங்க ஆபரணங்களை மீட்டு, மேலும் 30 ஆயிரம் ரூபாவை சந்தேக நபரான ரொஷானாவுக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி, சந்தேக நபரான ரொஷானா, மும்தாஸின் வீட்டில் சூது விளையாடி ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ரூபாவை வென்றுள்ளார்.
இந்நிலையில் அப்பணத்தில் ஒரு இலட்சம் ரூபாவை மும்தாஸிடம் கொடுத்துள்ள சந்தேக நபரான ரொஷானா, ‘ரத்னா மாமி’ யின் தங்க நகைகளை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.
இந்நிலையில், அந்த தங்க நகைகளை அடகிலிருந்து மீட்டது, மீள ஒப்படைப்பதற்காக அல்ல எனவும், அவற்றை மீண்டும் எவருக்கும் வழங்கப் போவதில்லை எனவும் மும்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையிலேயே பிரச்சினை இருவருக்கும் இடையே தோன்றியுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டதாக சப்புகஸ்கந்த பொலிஸார் நீதிமன்றுக்கு அளித்துள்ள மேலதிக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ ரத்னா மாமி’ தனது தங்க நகைகளை மீள கோரி வந்த நிலையில், ரொஷானா விடயத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, மும்தாஸை அச்சுறுத்தி அந்த தங்க நகைகளை பெற முதலில், ரொஷானாவும் பிரதான சந்தேக நபரான் அவரது சகோதரரும் மும்தாஸின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
எனினும் அப்போது மும்தாஸின் வீட்டில் வேறு இருவர் இருந்தமையால், மும்தாஸை ஏமாற்றி மட்டக்குளி , சமிட்புரவில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்து வந்து இந்தக் கொலையை புரிந்துள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கொலை செய்த பின்னர், கொல்லப்பட்ட மும்தாஸ் அணிந்திருந்த ‘ ரத்னா மாமி’ யின் நகைகளை கழற்றி, தான் அடகிலிருந்து அவற்றை மீட்டதாக கூறி அவரிடமே ரொஷானா ஒப்படைத்துள்ளதுடன், ஏனைய நகைகளை விற்பனை செய்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே கொலை செய்யப்பட்ட மும்தாஸின் சடலத்தை, தனது கணவரின் துணையுடன் ரொஷானா, பிரதான சந்தேக நபரான சகோதரருடன் சேர்ந்து வீட்டிலிருந்த பயணப் பையில் இட்டு சப்புகஸ்கந்த பகுதிக்கு கொண்டு வந்து கைவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
முதலில் சமிட்புரவிலிருந்து மேலும் சில பழைய பொருட்களுடன் சடலம் இடப்பட்ட பயணப் பையை வெல்லம்பிட்டி பகுதிக்கு எடுத்து வந்து, அங்கிருந்தே பிரதான சந்தேக நபர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டிக்கு மாற்றி சப்புகஸ்கந்த பகுதிக்கு கொண்டு சென்று கைவிட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.’
இந்நிலையில், கடந்த 9 ஆம் திகதி கொலையின் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட ரொஷானாவின் சகோதரர் மொஹம்மட் நெளஷாட் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில், மெகொட கொலன்னாவ பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்யப்ப்ட்டார்.
அவரிடமிருந்து பொலிஸார் கொலை செய்யப்பட்ட மும்தாஸுக்கு சொந்தமான இரு கையடக்கத் தொலைபேசிகளையும் மீட்டனர். அவரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின்போது கொலை தனது கையால் நிகழ்ந்ததாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.
‘ எனது சகோதரிக்கும் மும்தாஸுக்கும் இடையே நகை ஒன்றை மையப்படுத்திய பிரச்சினை இருந்தது. மும்தாஸை அவரது வீட்டுக்கு வெளியே அழைத்து சென்று அவரை மிரட்டி நகைகளை பெற்றுக்கொள்வதே திட்டமாக இருந்தது.
இதற்காகவே நான் அவரது வீட்டுக்கு சென்று அவரை அழைத்துச் சென்றேன். இதன்போது சகோதரியின் திட்டப்படி நாம் தொலைபேசியில் பேசிக்கொள்ளாது, குறுந்தகவல்களில் திட்டத்தை அமுல் செய்யும் விதம் தொடர்பிலான தகவல்களைப் பரிமாற்றிக் கொண்டோம்.
பின்னர் சமிட் புரவில் உள்ள எமது வீட்டுக்கு மும்தாஸை அழைத்து வந்த போது, அங்கு சகோதரியும் அவரும் நகை தொடர்பிலான வாக்குவாதத்தில் இருந்தனர்.
வீட்டுக்குள் சென்று கொஞ்சம் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு வந்து, வீட்டிலிருந்த உலக்கையால் மும்தாஸின் தலையில் அடித்தேன். அவர் இறந்துவிட்டார். ‘ என கைதான பிரதான சந்தேக நபர் வாக்குமூலளித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 34 வயதான பிரதான சந்தேக நபரும் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்