தலைமகனின் வீர வணக்க நாள் ; கரையொதுங்கிய முள்ளிவாய்கால் தூபி ; பொலிஸார் திகைப்பு
மட்டக்களப்பு, கல்லடி வாவியில் முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படம் , கறுப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தூபி ஒன்று மிதந்து வந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
சனிக்கிழமை (17) இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்ட நிலையில் மிதக்கும் வகையிலான இன அழப்பின் நினைவாக அமைக்கப்பட்ட தூபி மிதந்து முகத்துவாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பெரும் பரபரப்பு
இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் மனிதர்கள் இன்றி ஒரு சிறிய படகு போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை மக்கள் கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இனையடுத்து அங்கு வந்த புலனாய்வு பிரிவினர் பொலிஸார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இந் நிலையில், அந்த மர்மான படகு முகத்துவாரம் நோக்கி நகர்ந்து கொண்ட நிலையில் டச்பார் பகுதி வாவிக்கரையில் அமைந்துள்ள மீன்பிடிபடகு தயாரிக்கும் கட்டிட பகுதியில் கரை ஒதுங்கியது.
அங்கு சென்ற பொலிஸார் அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்து மீட்டனர். சுமார் 4 அடி கொண்ட சதுரமான றெஜிபோமில் நடுவில் முள்ளிவாய்கால் அமைந்துள்ள நினைவு தூபி போன்ற புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் பொறிக்கப்பட்டு அதற்கு அருகில் கறுப்பு ,சிவப்பு, மஞ்சள் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மொழுகுதிரி போன்ற வடிவிலான முன்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.
வாவியில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூபியை யார் அமைத்தது, இதனை எங்கிருந்து வாவியில் விட்டார்கள் என தெரியாது அரசாங்க புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் திகைப்பில் உள்ளனர்.
இதனையடுத்து, மீட்கப்பட்ட அந்த மிதக்கும் நிலையில் அமைக்கப்பட்ட இன அழிப்பு தூபியை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனர்.