காலி கலவரம் குறித்து சபையில் போட்டுடைத்த எம்பி!
கடந்த காலி முகத்திடல் போராட்ட காரர்கள் மீது மீது தாக்குதல் நடத்த வருபவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனை வெளியிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
காலி முகத்திடன் போராட்டம் இங்கு ஒரு மாதமாக நடந்து வருகிறது. இந்த போராட்டத்தின் மீது கல் எறியும் எண்ணம் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இல்லை. அதோடு நாங்கள் எந்தவிதமான தாக்குதலையும் மேற்கொள்ளவுமில்லை.
சம்பவம் இடம்பெற்றபோது நானும் அலரி மாளிகையில் இருந்தேன். பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பேசினேன். தயவுசெய்து இதை நிறுத்துங்கள் என கூறினேன். அதன்பின்னர் ஜனாதிபதியினை சந்திப்பிற்காக நான் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றேன். அங்கு செல்லும் வழியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷுமாரசிங்க என்னிடம் பேசினார்.
அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக தலையிட்டு இதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கூறுங்கள் என தெரிவித்தார். அப்போது ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் இருந்தனர்.
இதையடுத்து, இந்த விடயம் குறித்து நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். அதனைத்தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பிரதி பொலிஸ் மா அதிபரிடம் ஜனாதிபதி கேட்டபோது, ’ மதியம் 12.40 மணிக்கு ஐஜிபி என்னிடம் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த வேண்டாம், தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்திருந்தார்.
அத்தோடு, அதனை தடுக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் தம்மிடம் கூறியதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவித்தாகவும் ரமேஸ் கூறினார்.
இதனையடுத்து, ஜனாதிபதி நான் கூறுகிறேன் உடனடியாக அதனை நிறுத்துங்கள் என கூறிய பின்னரே கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அத்தோடு, இந்த விடயம் இந்த அளவுக்குப் பிழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்தான் இதற்கு காரணம். காலிமுகத்திடல் சம்பவத்திற்கு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்ததாகவும், காலி முகத்திடல் மைதானத்திற்கு இரண்டு நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் , உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி, இறுதி நேரத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தனக்கும் பல மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.