ஊடகவியலாளர் மாநாட்டுக்கு குப்பி விளக்குடன் வந்த எம்பி!
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டுக்கு குப்பி விளக்குடன் சென்றுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு குப்பி விளக்குடன் சென்றுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய நிர்வாகம் நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்கு தள்ளுவது புலனாகிறது. அத்துடன் அவர்களின் இரண்டு ஆண்டு கால ஆட்சி தோல்வியடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அத்துடன் இதன்போது பயணத்தை குறைக்கவும், பாடசாலைகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை மூடவும், வேலைக்கு செல்வதை குறைக்கவும், நாளாந்தம் கொழும்புக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அமைச்சர் கம்மன்பில பரிந்துரைத்த முன்மொழிவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளை குறைக்க அரசாங்கம் முன்வந்தால், குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது அது சிக்கலான விடயம் என அவர் கூறினார்.
தற்போதைய மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் கூட்டு அணுகுமுறை இல்லை எனவும், உண்மையில் தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் தலையீடு செய்வதை தான் காணவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.