மன்னாரில் உயிரிழந்த தாய் சேய் உடலங்கள் யாழ்ப்பாணத்திற்கு ? விசாரணையில் இறங்கிய சுகாதார அமைச்சு
மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி, திருமணமாகி 10 வருடங்கள் குழந்தை பேறில்லாத நிலையில் நேற்றைய தினம் பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் பதட்டமான நிலை
இந்நிலையில் நிலையில் சிகிச்சையின் போது தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர். அவர்களின் உயிரிழப்புக்கு உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அத்துடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான் இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
நீதவானின் உத்தரவுக்கு அமைய நேற்றையதினம் (19) சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
சுகாதார அமைச்சினால் விசாரணை
அதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழந்திருந்தனர். இந்த மரணத்திற்குக் காரணம் வைத்தியசாலையின் கவனயீனம் என உயிரிழந்த 28 வயதுடைய தாயின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.