மன்னார் வைத்தியசாலையில் தாய் - சேய் மரணம்; வைத்தியர் இடமாற்றம்
மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுகாதார அமைச்சின் விசேட விசாரணை
மன்னாரில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாயும், சிசுவும் உயிரிழந்தமை துரதிஷ்டவசமான சம்பவமாகும். இது குறித்த தகவல் கிடைக்கப் பெற்று 12 மணித்தியாலங்களுக்குள் சுகாதார அமைச்சின் விசேட விசாரணைக்குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விசாரணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனுடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேசமயம் வவுனியா வைத்தியசாலையின் நரம்பியல் மற்றும் பிரசவ விசேட வைத்தியர் ஒருவர் அங்கு தற்காலிகமாக பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்.
மன்னார் வைத்தியசாலைகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளது. எனவே இவை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதேவேளை வைத்தியசாலையிலுள்ள வசதிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.