சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்கு பூரண காவல்துறை மரியாதையுடன் நடத்த முடிவு!
இலங்கையின் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளைப் பூரண காவல்துறை மரியாதையுடன் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற காவல்துறை மா அதிபர் ஒருவர் காலமாகும் போது வழங்கப்படும் அனைத்து உத்தியோகபூர்வ காவல்துறை மரியாதைகளும் மறைந்த சி.டி. விக்ரமரத்னவிற்கும் வழங்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவிப் காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வரும் ஜூலை 20 ஆம் தேதி காவல்துறை மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. தற்போது கொழும்பிலுள்ள தனியார் மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நாளை (ஜூலை 19) முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 35 வது காவல்துறை மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன, நேற்று (ஜூலை 17) காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், கிழக்கு கொழும்பு (முல்லேரியா) ஆதார மருத்துவமனையின் நீதிமன்ற மருத்துவ அதிகாரி, விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான உடற்கூறாய்வு பரிசோதனையில் 'திறந்த தீர்ப்பு' ஒன்றை வழங்கியுள்ளார்.
அத்துடன், அவரது உடலின் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மாலபே காவல்துறையினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.