கல்கிஸை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான பல தகவல்கள்!
கல்கிஸை சிறிபால மாவத்தையில் இன்று (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர், படோவிட்ட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்ட அவர், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தற்போது துபாயில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் ‘கொஸ் மல்லி’ என்ற பெயரில் அழைக்கப்படும் பாதாள உலக நபரின் நெருங்கிய கூட்டாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரான 47 வயதுடைய நபர், சிறிது நேரத்தில் கைத்துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர், ‘படோவிட்ட அசங்க’ கும்பலைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
பாதாள உலக பிரமுகர்களுக்கும் போட்டி கும்பல் தலைவர்களான ‘கொஸ் மல்லி’ மற்றும் ‘படோவிட்ட அசங்க’ ஆகியோருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, இரு கும்பலுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்றைய கொலையுடன் 7 ஆக உயர்ந்துள்ளது.
மேல் மாகாண தென் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.