புலம்பெயர் தமிழர்களின் கடவுச் சீட்டுகள் தொடர்பில் இடம்பெறும் மிகப் பெரும் பண மோசடி!
புலம்பெயர் தமிழர்களின் கடவுச் சீட்டுகள் திட்டமிட்டு தாமதிக்கப்பட்டு மிகப் பெரும் பண மோசடி செய்யப்படு வருதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
1939ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் திருநாட்டின் கெளரவமானது இப்பூகோளத்தில் மிகவும் கனதியானதொன்றாகவிருந்தது..!
நாம் தானியங்களையும், உணவு உற்பத்திகளையும் உதவியாக எமது அண்டைய நாடுகளுக்கு கொடுத்த வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்..! ஆனால், இன்றோ எந்த நாடு எமக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற ஏக்கத்துடன் நாம் இத் திருநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..!
இந்த நிலைமை ஏற்பட என்ன காரணம் என்று நாம் ஒவ்வொருவரும் எம்மை நாம் கேட்டுக்கொள்வதே பொருத்தமாகவிருக்கும்..!
நாடு இன்று வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது..! இவற்றுக்கு காரணமானவர்களாக எமது கொள்கை வகுப்பாளர்களும், அரச இயந்திரத்தை இயக்கும் உயர்மட்ட அதிகாரிகளும் முதலில் பொறுப்புக் கூற கடமைப்பட்டவர்கள்..!
எமது அண்டைய நாடுகளெல்லாம் தமது பொருளாதாரத்தை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்று போட்டிபோட்டுக் கொண்டு இயங்குகின்றன.
அது மாத்திரமன்றி உல்லாசத்துறையை வளர்த்துக்கொள்ள மிகவும் முனைப்புடன் செயலாற்றும் இவ்வேளையில், நாமோ எமக்கான வாய்ப்புகளை தட்டிக்கழித்தவர்களாக வருகின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தாது, ஒட்டு மொத்த நாட்டு மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் எடுக்காமல், நாட்டின் வளர்ச்சியை பொருட்படுத்தாது எமது நாடு நோக்கி வருகின்ற முதலீடுகளை வேறு நாடுகளை நோக்கி எம்மையறியாமல் அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்..!
எமது நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தினால் நாட்டை விட்டு அகதிகளாக புலம்பெயர்ந்த மக்கள் தொகை 10 இலட்சங்களுக்கும் அதிகமாகும்..!
இவர்களில் கணிசமான மக்கள் பொருளாதாரத்தில் வலுவானவர்களாக தாய் நாட்டிற்கு திரும்பவும் வந்து முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவிருந்தும், எமது நாட்டிற்கு திரும்ப முடியாதவர்களாகவிருக்கின்றார்கள்..!
இதற்கு பிரதான காரணமானவர்கள் எமது நாட்டின் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திலுள்ள உயர் அதிகாரிகள்..!
ஒன்று இரண்டு என்று நடைபெற்ற முறைகேடுகள் இன்று பாரிய அளவில் இத்திணைக்களத்தில் நடைபெறுகின்றது..! இதனை மறைமுகமாக உயர் அதிகாரிகள் ஆதரிக்கின்றார்கள். அதன் மூலம் பலனடைகின்றார்கள். முறையாக நடக்க வேண்டிய மக்கள் சேவை முடங்கிக்கிடக்கின்றது.
புலம்பெயர்ந்த மக்கள் குறிப்பாக, தமிழ் பேசும் மக்கள் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது அக்கடவுச்சீட்டானது 1-3 மாதங்களுக்குள் விண்ணப்பதாரிகளின் கரங்களில் கிடைக்கக் கூடியதாகவிருந்தது..!
இன்றோ முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, இலங்கைக்கான வெளிநாட்டு தூதரங்களின் அதிகாரிகளினால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பணம் பெறப்பட்டதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களில் குறைபாடுகள் உள்ளதாக கொழும்பிலுள்ள அதிகாரிகள் கூறுவது எந்த வகையில் நியாயமானது..!
நடைமுறையில் ஆவணங்களில் ஒரு சிறு தவறு இருந்தாலும் அதனை தூதரக அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதில்லை..!
விண்ணப்பத்தாரி சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் வரை ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பணத்தை பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டைக் கொடுக்கமாட்டார்கள்..! பல காரணங்களைக் கூறி கடவுச்சீட்டை வழங்காதிருப்பது இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தின் கீழ் பாரியதொரு குற்றமாகும்..! அத்தோடு, மனிதவுரிமை மீறலுமாகும்.
அவ்வாறாயின், வெளிநாட்டு தூதரகங்களுக்கு பயிற்சி அளிக்கப்படாத அதிகாரிகளையா இந்த அரசு அனுப்பிக்கொண்டிருக்கின்றது..?
ஒவ்வொரு தூதரகத்திலும் வரும் விண்ணப்பதாரியை அணுகுவதற்கு ஏதோவொரு நபர் இருக்கின்றார்..! அவரூடாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்படுகின்றது..!
அதன் பின்னர் பெருமளவு பணம் பெறப்பட்டு குறித்த கடவுச்சீட்டு மாத்திரம் விரைந்து அனுப்பப்படுகின்றது..! ஏனைய கடவுச் சீட்டுகள் மாதங்களாக, வருடங்களாக திட்டமிட்டு பணம் பெறுவதற்காக முடக்கப்படுகின்றன…!
இவ்வாறு முக்கிய துறைகள் செயற்ப்படுமாயின், எவ்வாறு உல்லாசப் பயணிகள் எமது நாட்டை நோக்கி வருவார்கள்..? எவ்வாறு அந்நிய செலவாணி நாட்டிற்குள் வரும்..?முதலீடுகள் எமது நாட்டிற்குள் வருமா..? நாடு வளம் பெறுமா…? இந்நிலை தொடருமாயின், நாம் தொடர்ந்து மற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலையே காணப்படும்..!
ஆகவே, அரச இயந்திரத்தை இயக்கும் துறைகளிலுள்ள மோசடிகள் உடன் கண்டறிப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதோடு, பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் மக்கள் பயனடையும் வகையில் அவர்களின் கடவுச்சீட்டுகள் உடன் வழங்க இந்த துறைக்குப் பொறுப்பாகவுள்ளவர்கள் ஆவணம் செய்ய வேண்டுமென்று எமது மக்களின் சார்பாக Martin Jeya என்ற நபர் இந்த பதிவை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.