விமானநிலையத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (07) விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஆவார். சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து நேற்று காலை 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
91 கையடக்கத் தொலைபேசிகள்
இதன்போது விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த இரண்டு பயணப்பொதிகளிலிருந்து 91 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட வர்த்தகரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (08) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.