துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,000 ஆக உயர்வு...!
துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் 24,617 ஆகவும் சிரியாவில் 4,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுத்தின் பிறகு சிரியாவில் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.
துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது.
அதனைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இரவில் 6 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, சிரிய எல்லையை அண்டியுள்ள பகுதிகளில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கட்டிட குவியல்களை தோண்டத் தோண்ட சடலங்களாக மீட்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
.இந்த நிலையில், துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,000ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே நேரத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் கிட்டத்தட்ட 900,000 மக்களுக்கு சூடான உணவு அவசரமாகத் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிரிய அரசாங்கம், தமது கட்டுப்பாட்டிற்கு வெளியே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.