09 வருடங்களாக கட்டப்பட்டு வரும் சுகாதார அமைச்சின் கட்டிடம் ; நளிந்த ஜயதிஸ்ஸ விடுத்துள்ள பணிப்புரை
சுகாதார அமைச்சின் புதிய அலுவலக வளாகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்குமாறும், இந்த ஆண்டுக்குள் 07 மாடிகளின் பணிகளை நிறைவுறுத்துமாறும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுகாதார அமைச்சின் புதிய 16 மாடி அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள், கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டதுடன், தற்போது அரசாங்க நிதியைப் பயன்படுத்தி கட்டுமானத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சுகாதார அமைச்சின் ஒரு பகுதி வாடகைக்கு தனியார் கட்டிடத்தில் பராமரிக்கப்பட்டு வருவதுடன், குத்தகை காலத்தை நீட்டிக்காமல், அந்த அலுவலகங்களை விரைவில் இந்த புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
முழு கட்டிடத்தையும் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிப்பதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு (CECB) அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.