யாழ் மத்திய கல்லூரியில் பதட்டம் ; திரைநீக்கம் செய்யாத அமைச்சர்
நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்த யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தின் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நினைவுக் கல் திரைநீக்கம் செய்யாமல் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று (23) நிகழ்விடத்தை விட்டு வெளியேறினார்.
2012ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில ஆண்டுகளிலேயே பராமரிப்பு செயலிழந்து கைவிடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் தடாகத்தை மீளப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று திடலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், டைவிங் தடாகத்தை விட பொதுமக்களும் மாணவர்களும் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வகையில் இது சாதாரண ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக மாற்றப்படலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.
பொது நிதி பயன்படுத்தப்படும் போது அதனால் அதிகமானோருக்கு பயன் கிடைக்க வேண்டும் என்றார். ஆனால் இந்த யோசனைக்கு பாடசாலை மட்டத்தில் ஆதரவும் எதிர்ப்பும் உருவாகி, இரண்டு விதமான கருத்துகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.
ஒரு தரப்பு முன்னர் இருந்தபடி டைவிங் தடாகமாகவே புனரமைக்க வேண்டும் என வலியுறுத்த, மற்றொரு தரப்பு அமைச்சரின் யோசனையை ஏற்றுக்கொண்டது.
இதனால் ஏற்பட்ட குழப்பத்தினால், புனரமைப்பு பணிகளுக்காக முன்கூட்டியே வைக்கப்பட்டிருந்த நினைவுக் கல் திரைநீக்கம் செய்யாமல் அமைச்சர் உரையாற்றி உடனே வெளியேறினார்.

பாடசாலை அதிபர் உட்பட சிலர் திரைநீக்கம் செய்யுமாறு கோரிய போதும், ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில் அதை செய்ய முடியாது என அமைச்சர் மறுத்தார்.
பாடசாலை மட்டத்தில் ஒருமித்த தீர்மானம் எட்டப்பட்ட பின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கலாம் என அவர் தெரிவித்தார்.
அமைச்சரின் விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.