யாழில் வாகனத்தைவிட்டு இறங்காத அமைச்சர்; ஏமாற்றத்துடன் திரும்பிய அதிகாரிகள்!
யாழ்ப்பாண நெடுந்தூர பஸ் நிலையத்தை, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன வாகனத்தில் இருந்து இறங்காது அதில் சென்றவாறே பார்வையிட்டார்.
குறித்த நெடுந்தூர பஸ் நிலையம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பந்துல குணவர்த்தன, பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு ஏற்பாடுகள், நேற்று (21) செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் வாகனத்தில் இருந்தவாறே பஸ் நிலையத்தை பார்வையிட்டுவிட்டு, ஒருசில நொடிகளில் அங்கிருந்து சென்றார். இதனால் அமைச்சருடன் கலந்துரையாடுவதற்காக வந்திருந்த அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
120மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிப்பு
நகர அபிவிருத்தி மற்றும் கரையோர பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் சுமார் 120மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தூர பஸ் நிலையம், 2021 ஜனவரி மாதம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இருந்த போதும் இன்னமும் மக்கள் பாவனைக்கு வராத நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் குறித்த பஸ் நிலையம் பராமரிப்பற்ற இடமாக மாறி வருவதுடன், சமூகத்துக்கு பிறழ்வான நடத்தைகள் இடம்பெற்று வருவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்நிலையில் குறித்த பஸ் நிலையத்தை இயக்குவதற்கு பல்வேறு தரப்பினர் முயற்சித்த போதும் கூட இலங்கை போக்குவரத்துச் சபை அங்கிருந்து சேவையை மேற்கொள்ள மறுத்து வருவதால், பஸ் நிலையம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
You My Like This Video