யாழ். வர்த்தகர்களை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத்
யாழ்ப்பாண வர்த்தகர்களை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இன்று (12) சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளர்.
இந்த நிலையில் இன்று (12) மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ்ப்பாண வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, வடமாகாண சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடலிலும் அமைச்சர் விஜித ஹேரத் ஈடுபட்டார்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்த வட மாகாண தொழில் முனைவோரின் கருத்துக்கள் தொடர்பாக இதன்போது அமைச்சர் விஜித ஹேரத் கேட்டறிந்துகொண்டார்.
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ஆகாய மார்க்க பயண சேவையினை ஆரம்பித்தல், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இலங்கைக்கு வரும் பயணிகள் விபரத்தை குறித்த திணைக்களூடாக வெளிப்படுத்துதல்,
வில்பத்து சரணாலயத்துக்கான நுழைவாயிலை மன்னாரிலும் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அமைச்சரிடம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த சாதக பாதகங்கள் இதன்போது அமைச்சரால் தெளிவுபடுத்தப்பட்டது.
இதேவேளை, குறித்த கலந்துரையாடல் நிறைவில், நேற்றைய தினம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரியவின் யாழ்ப்பாணத்துக்குக்கான விஜயம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து எதுவும் தனக்கு தெரியாது என அமைச்சர் பதிலளித்திருந்தார்.
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான பவானந்தராஜா, இளங்குமரன் மாநகரசபை வேட்பாளர் கபிலன், வட மாகாண தொழில் முனைவோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.