பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை விடுத்த எரிசக்தி அமைச்சர்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலையை ஏற்படுத்த வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த எரிபொருள் நெருக்கடிக்கு, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும், பணியாளர்களும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அல்லர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சில சில இடங்களில் சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது.
எனவே, எதிர்வரும் சில நாட்களுக்கு வீதியை இடைமறித்து, எந்தவொரு இடத்திலேனும் குழப்பநிலையை ஏற்படுத்தினால், அதாவது எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களைத் தாக்கினால், அன்றைய தினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலைக் கொள்வனவு செய்ய புதிதாக 2 நிறுவனங்களும், விமான எரிபொருளை வழங்க மற்றுமொரு நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின்மூலம், தற்போது நாளொன்றுக்கு 350 மெற்றிக் டன் லீற்றர் பெற்றோல் உற்பத்தி செய்யப்படுகின்றது.
எரிபொருள் சுத்திகரிப்பின் மூலம் நாளொன்றுக்கு 600 மெற்றிக் டன் டீசல் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளும் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதேநேரம், நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலில் உள்ள டீசலின் தரப்பரிசோதனை முடிவடைந்த பின்னர், இன்று மாலை முதல் அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தக் கப்பலில் 40,000 மெற்றிக் டொன் டீசல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.