அமைச்சர் நாமலின் மனைவி குடும்பத்துடன் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறவினர்கள் இன்று காலை நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர் கொழும்பில் வெளியாகும் ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
எனினும் லிமினி ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவரவில்லை. பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஏனைய இரண்டு மருமகள்களும் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனரா என்பதும் தெளிவாகவில்லை என டெய்லி மிரர் பத்திரிகை கூறியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி போராட்டங்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையிலேயே அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் நாட்டில் இருந்து வெளியேறி சென்றுள்ளமை தொடர்பாக இந்த செய்தி வெளியாகியுள்ளது.