எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்தவது தொடர்பில் வலுசக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்
எரிபொருள் மானியம் வழங்கலை இடைநிறுத்த எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. மத்திய கிழக்கில் மோதல் நிலைமை இன்றும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.
உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையற்றதாகவே காணப்படுகிறது. எரிபொருள் விலை குறைவடைந்து நிலையான தன்மையை அடைந்தால் அதன் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம்
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற அமர்வின் போது சஜித் பிரேமதாச, முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மத்திய கிழக்கில் மோதல் நிலைமை தோற்றம் பெற்றதை தொடர்ந்து உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்து தேசிய மட்டத்தில் விலை தளம்பல் ஏற்பட்டது. மாத விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது முழு சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தவில்லை.
எரிபொருள் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக 57 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபா, ஒக்டென் 92 ரக பெற்றோலுக்கு 20 ரூபா என்ற அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது.
மானியம் வழங்கலை இடைநிறுத்த எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட 57 பில்லியன் ரூபா முழுமையாக செலவழிக்கப்படவில்லை. எரிபொருள் விலை குறைப்பு குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
மத்திய கிழக்கில் மோதல் நிலைமை இன்றும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. உலக சந்தையில் எரிபொருள் விலை நிலையற்றதாகவே காணப்படுகிறது. எரிபொருள் விலை குறைவடைந்து நிலையான தன்மையை அடைந்தால் அதன் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என்றார்.