கத்தார் தாக்குதல் ; வான்வெளியை மூடிய மத்திய கிழக்கு நாடுகள்! சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் அமெரிக்க இராணுவத் தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு
கத்தாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
நேற்று (திங்கள்கிழமை முதல்) தனது வான்வெளியை மறு அறிவிப்பு வரும் வரை மூடியுள்ளதாக குவைத் அறிவித்தது. அதோடு குவைத் ஏர்வேஸ் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைப் பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் நாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக வான்வெளி மூடலை அறிவித்தது.
அதிகரிக்கும் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி கத்தாரும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகமும் தனது வான்வெளியை மூடியதாக FlightRadar24 தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான், ஈராக், சிரியா மற்றும் இஸ்ரேல் வான்வெளிகள் பெரும்பாலும் காலியாக இருப்பதாக FlightRadar24 தரவுகள் தெரிவிக்கின்றன.
"சேஃப் ஏர்ஸ்பேஸ்" என்ற உலகளாவிய விமானப் பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் வர்த்தக விமானங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.