யாழ்ப்பாணத்தில் மெட்ரோ பேருந்து சேவை; பரீட்சார்த்தப் பயணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன பொதுப் போக்குவரத்துச் சேவையை அறிமுகப்படுத்தும் நோக்கில், மெட்ரோ பேருந்துகளின் பரீட்சார்த்தப் பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண நகரிலிருந்து புறப்பட்ட பேருந்து, பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி (KKS வீதி), பருத்தித்துறை வீதி உள்ளிட்ட பல்வேறு பிரதான வீதிகளில் பயணித்து அதன் செயல்திறன் பரீட்சிக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் இப்பரீட்சார்த்தப் பயணத்தில் கலந்துகொண்டனர்.

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாகவே யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்பேருந்துச் சேவையை ஆரம்பிப்பதற்கான எதிர்பார்ப்பு உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதிக் கட்டமைப்பைக் கருத்திற்கொண்டு, சுமார் 32 பயணிகள் பயணிக்கக்கூடிய சிறிய ரக மெட்ரோ பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சேவை ஆரம்பிக்கப்படுவது யாழ்ப்பாண மக்களின் போக்குவரத்துத் தேவைகளை இலகுபடுத்துவதுடன், பாதுகாப்பான, வசதியான மற்றும் வினைத்திறனான பொதுப் போக்குவரத்திற்கும் வழிவகுக்கும்.
மேலும், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் ஒரே காலப்பகுதியில் இச்சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.