சினிமா பாணியில் பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படை கைது!
இலங்கையில் சினிமா பாணியில் பணத்துக்காக கொலை செய்யும் நான்கு பேர் கொண்ட கூலிப்படை ஒன்று களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை - பண்டாரகமை பிரதேசத்தில் ஏப்ரல் 17 ஆம் திகதி இனந்தெரியாத நபர்கள் சிலர் வர்த்தகர் ஒருவரை மன்னா கத்தியால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாள், மன்னா கத்திகள் தொலைபேசிகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை, பயாகலை, பண்டாரகமை மற்றும் உரகஹ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30, 32, 36 மற்றும் 51 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து வாள், 02 மன்னா கத்திகள் மற்றும் குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட 03 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கடந்த 2024 ஆம் ஆண்டில் பாணந்துறை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் நபரொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் பணத்துக்காக கொலை செய்தல், கப்பம் கோருதல் மற்றும் கத்தி முனையில் மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மெற்கொண்டு வருகின்றனர்.